Saturday, November 20, 2010

இதோ எந்தன் தெய்வம்......

தெய்வம்...... உலகில் பெரும் பகுதியினர் தினம் தினம் மன்றாடி, திண்டாடி தேடிக் கொண்டிருக்கும் உன்னத அரு உருவம். வடக்கிலிருந்து தெற்கு நெடுகிலும்,  கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் கடவுள் எங்கே? கடவுள் எங்கே? என்று கூவல் இட்டு தேடும் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லை நமது இந்திய சமுதாயத்தில்.

கடவுள் எங்கே? எப்பேர்பட்ட தெய்வ பக்தனும் இதுவரையில் கடவுளை தேடிப் பிடித்ததாக சரித்திர பக்கங்களில் பதிக்கப்படவில்லை.... பார்த்தவர்களும் இல்லை.

பிறகு எங்கே கடவுள்? பார்த்தால் தான் கடவுளா? கண்களுக்கு வெட்ட வெளிச்சமாக தென்படுபவைகள் தான் நம்பத்தக்கவையா? என்னதான் பார்ப்பதற்க்கு அழகாக காட்சியளித்தாலும் உணர முடியாதவைகள் இருந்தும் என்ன பயன்? சில சமயங்களில் கண்களுக்கு தெரியாத அசரிரீதிகள் உணர்வுபூர்வமாக இருக்கும் போது விலை மதிக்க முடியாதவையாக இருக்கிறதே!

கடந்து உள்ளே செல்வதுதான் கடவுள்....படித்த  புத்தகத்தின் ஒரு பக்கம் நினைவுறுத்துகிறது. கடந்து உள்ளே செல்வது.... என்னை கடந்து உள்ளே செல்லும் போதும் பிறரை கடந்து உள்ளே செல்லும் போதும் நான் உணர்ந்த உண்ணத உணர்வு தெய்வாம்சம்.

இங்கு அன்பே சிவம் கமல்ஹாசனைப் போல் நான் தான் கடவுள் என்றும் நீ தான் கடவுள் என்றும் கூற எனக்கும் ஆசைதான்... மறுகனமே என்னை பார்த்து சிரிப்பவர்கள் தான் அதிகமாக இருப்பர்.

சிரிப்பாகத்தான் இருக்கும் ஆனால் சிந்தித்தும் பார்க்க வேண்டும். நான் நாத்தீகன் ஒன்றும் இல்லை. கடவுளுக்கு உருவம் இருப்பதாக நான் நம்பவில்லை.... ஆனால் இன்று என்னை கடந்து சென்ற ஒருத்தியிடம் நான் கடவுளின் அம்சத்தை உணர்ந்தேன்.

இதோ எந்தன் தெய்வம்.......

இன்று காலை எதோ ஒரு இனம் புரியாத ரணம் மனதில். யாரிடமும் அதிகம் பேச தோன்றவில்லை. எனது காலை பொழுது வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் இன்றி அமைதியாகவே நகர்ந்தது. நல்ல பசி இருந்தும் பசியாற மனமில்லை. வீட்டில் எனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் கடமையை செவ்வன முடித்து விட்டு வரவேற்பறைக்கு வந்தேன்.

நான் அதிகம் நேசிக்கும் இரு செல்லங்களில் ஒருத்தி ஒய்யாரமாக படுத்துகொண்டு பால் அருந்திக் கொண்டிருந்தாள். "செல்லம்" என்று நான் அழைத்திட கட்டி அணைக்க கோரி கைகளை நீட்டினாள். வயிரை கிள்ள ஆரம்பித்த பசி சற்றே அடங்கினாற் போல் தோன்றியது.

சிரித்து விட்டு நான் நாற்காலியில் அமர்ந்தேன். பின் அவள் குளித்து முடித்து குட்டி தேவதையாய் முன் வந்து நின்றாள். மின்னல் கண்களும், சுருண்டிருக்கும் பனி புல்களைப் போன்ற அவள் கூந்தலும், எழுமிச்சம் பழ நிறத்தில் கூடுதல் மஞ்சள் சேர்தாற் போன்ற அவள் முகமும் என்னை  அவள் கண்ணத்தை கடித்து விட தூண்டியது. பின், கத்தி ஊரையே கூட்டி விடுவாள் என்று எண்ணி அமைதியாய் இருந்தேன்.

பசி மீண்டும் என்னை சீண்டி பார்த்தது. அதற்கு விடைக் கொடுத்தாற் போன்று கொஞ்சும் மழலையில் அந்த பிஞ்சு முல்லை "சித்தி சாப்டீங்களா?" வாங்க சாப்பிடலாம்? என்றாள். மலைத்தேன் செவிகளில் பாய்ந்தாற் போன்று இருந்தது. வேண்டாம் செல்லம் என்றேன். ஏன் வேண்டா?  பேபி ஊட்டவா சித்தி? என அவள் தட்டு தடுமாறி பேசி முடிப்பதற்குள் அவளை வாரி  நெஞ்சோடு அணைத்து கொண்டேன்.

மனதில் இருந்த இனம் தெரியாத சோகம் இடம் தெரியாமல் போய்விட்டது.
நான் தொலைத்த என் உயிர் சொந்தம் மீண்டும் குழந்தையே உருவெடுத்து என்னை தேடி வந்து விட்டதா?  உயிரை உரிஞ்சி எடுத்து விட்டது அவளது வார்த்தை. படிப்பதற்கு சாதரனமான விஷயமாக தோன்றினாலும் உணர்ந்த எனக்கு கடவுள் எங்கே என்ற வினாவிற்கு விடைத் தேடித் தந்த சம்பவம் இது.

எனது தெய்வம் அவளிடத்தில் அன்றி வேறு எங்கு இருக்க முடியும்?

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..... நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!

Wednesday, November 17, 2010

யார் கண் பட்டது?

அன்புள்ள அம்மா....
நான் மழலையாக இருந்த வேளை.. என்னை நானே அறியாத காலம்.. அன்று நான் உரைத்த அனைத்தும் நீ உணர்ந்தாய். என் கண்களில் இருந்து கண்ணிர் கொட்டும் முன்னரே அதனை தாங்கி பிடிக்க துட்டிதெழுந்திடும் உனது கைகள்.. பசி என்று கத்தி அழும் முன்னே பாலுடன் வந்து நிற்பாய் புன்முறுவல் சொட்ட... எனது ஒவ்வொரு உணர்வுகளையும் என்னை விட அதிகமாய் படித்து உணர்ந்தவள்... எனது அதிஷ்ட தேவதை நீ.


சற்றே வளர்ந்து படிக்கும் பருவத்தில் நான் செய்த குறும்பு தனங்கள் நீ அறியாததா? பல முறை எனது குறும்பால் உனையும் மறந்து நீ சிரித்தது இன்னமும் நீங்காமல் எனது நெஞ்சை அலங்கரித்து கொண்டிருக்கிறது. எனது அம்மா என்பதைக் காட்டிலும், நான் தோள் மேல் கைப்போட்டு பேசும் எனது தோழியாக, இரவில் கட்டி அணைத்து உறங்கும் எனது தலையனையாக நீ வலம் வந்தது தான் அதிகம்.... " தள்ளி படு யோகா சூடா இருக்கு" என நீ சொல்வதை சற்றும் காதில் வாங்கி கொள்ளாது மீண்டும் என் கால்களை உன்மேல் போட்டுக் கொண்டு உன்னை கட்டி தழுவி தூங்கி தான் பழக்கம் எனக்கு.... கொஞ்சம் சலித்து கொள்வதைப்போல் நீ முகம் சுலிப்பதும் தேனாய் இனித்த காலம் அது....


நான் பல்கலைகழகம் சென்ற போது.... ஐநூறு கிலோமீட்டர் தனியா போறாளே என நீ போட்ட ஆர்ப்பாட்டம் கொஞ்சமா நஞ்சம? அப்பப்பா இப்போது நினைத்தாலும் சிரிப்பு தாங்க முடியல மா.....


சிரிப்பா? அன்றைய கூத்து இன்றைய ரணம்.  மீண்டும் நினைக்கும் போது நெஞ்சு வெடிச்சிரும் போல இருக்கு. ஏன் அம்மா? யார் கண் பட்டது? நீ என்னுடன் சிரித்து பேசி ஆடி ஓடிய காலம் போதும் என முடிவு செய்து உன்னை என்னிடம் இருந்து பரித்து கொண்டது யார்? எமனா? யார் கொடுத்தது அவனுக்கு அந்த உரிமையை? பொறாமைக்காரன் அவன்! அவனுக்கும் எனக்கு அமைந்தாற் போன்று "அம்மா" இல்லை என்ற பொறாமையில் பறித்து கொண்டான் உன்னை!


இவ்வாளவு சீகிரமா ஏம்மா போனிங்க? நான் படித்து முடித்து வீடு திரும்பும் முன்னரே என் முகம் கூட பாராமல் கண்களை இறுக்கி மூடிக் கொண்டீங்களே.... என்ன கோபம் என் மேல்? கடைசி வரை என் கூட பேசாமலையே.... அழவே இல்லையே நான்... இப்போ நினைக்கும் போது அன்று ஒரு நாளே அழுது தீர்த்திருக்கலாம் என தோன்றுகிறது.... தினம் தினம் அழுவதைக் காட்டிலும் அது எவ்வளவோ மேல்....


இன்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது வாங்க மேடம் என்று குறும்பாக அழைக்க யார் இருக்கா?
பசிக்கிறது என்றதும் ஒரு வாய் சாதம் ஊட்ட யார் வருவா?
ஆயிரம் தலையனைகள் இருந்தும் நான் தலை வைத்து படுக்க உனது மடியை மட்டும் காணோம்
நிஜமாக என் முன் சுற்றி திரிந்த உன்னை புகைப்பட நிழலாக மட்டுமே பார்க்கிறேன்....
ஓயாமல் அழுகிறேன்..... யாருக்கும் தெரியாமால்....

ஆனால் ஒரே நிம்மதி..... கூடிய விரைவில் நீ என் மகளாக வந்து பிறப்பாய் என ஒரு நெஞ்சம் தந்த நம்பிக்கையில் பிறந்தது.....

ஓடி வா அம்மா சண்டைப் போட ஆளே இல்லை எனக்கு.