அன்புள்ள அம்மா....
நான் மழலையாக இருந்த வேளை.. என்னை நானே அறியாத காலம்.. அன்று நான் உரைத்த அனைத்தும் நீ உணர்ந்தாய். என் கண்களில் இருந்து கண்ணிர் கொட்டும் முன்னரே அதனை தாங்கி பிடிக்க துட்டிதெழுந்திடும் உனது கைகள்.. பசி என்று கத்தி அழும் முன்னே பாலுடன் வந்து நிற்பாய் புன்முறுவல் சொட்ட... எனது ஒவ்வொரு உணர்வுகளையும் என்னை விட அதிகமாய் படித்து உணர்ந்தவள்... எனது அதிஷ்ட தேவதை நீ.
சற்றே வளர்ந்து படிக்கும் பருவத்தில் நான் செய்த குறும்பு தனங்கள் நீ அறியாததா? பல முறை எனது குறும்பால் உனையும் மறந்து நீ சிரித்தது இன்னமும் நீங்காமல் எனது நெஞ்சை அலங்கரித்து கொண்டிருக்கிறது. எனது அம்மா என்பதைக் காட்டிலும், நான் தோள் மேல் கைப்போட்டு பேசும் எனது தோழியாக, இரவில் கட்டி அணைத்து உறங்கும் எனது தலையனையாக நீ வலம் வந்தது தான் அதிகம்.... " தள்ளி படு யோகா சூடா இருக்கு" என நீ சொல்வதை சற்றும் காதில் வாங்கி கொள்ளாது மீண்டும் என் கால்களை உன்மேல் போட்டுக் கொண்டு உன்னை கட்டி தழுவி தூங்கி தான் பழக்கம் எனக்கு.... கொஞ்சம் சலித்து கொள்வதைப்போல் நீ முகம் சுலிப்பதும் தேனாய் இனித்த காலம் அது....
நான் பல்கலைகழகம் சென்ற போது.... ஐநூறு கிலோமீட்டர் தனியா போறாளே என நீ போட்ட ஆர்ப்பாட்டம் கொஞ்சமா நஞ்சம? அப்பப்பா இப்போது நினைத்தாலும் சிரிப்பு தாங்க முடியல மா.....
சிரிப்பா? அன்றைய கூத்து இன்றைய ரணம். மீண்டும் நினைக்கும் போது நெஞ்சு வெடிச்சிரும் போல இருக்கு. ஏன் அம்மா? யார் கண் பட்டது? நீ என்னுடன் சிரித்து பேசி ஆடி ஓடிய காலம் போதும் என முடிவு செய்து உன்னை என்னிடம் இருந்து பரித்து கொண்டது யார்? எமனா? யார் கொடுத்தது அவனுக்கு அந்த உரிமையை? பொறாமைக்காரன் அவன்! அவனுக்கும் எனக்கு அமைந்தாற் போன்று "அம்மா" இல்லை என்ற பொறாமையில் பறித்து கொண்டான் உன்னை!
இவ்வாளவு சீகிரமா ஏம்மா போனிங்க? நான் படித்து முடித்து வீடு திரும்பும் முன்னரே என் முகம் கூட பாராமல் கண்களை இறுக்கி மூடிக் கொண்டீங்களே.... என்ன கோபம் என் மேல்? கடைசி வரை என் கூட பேசாமலையே.... அழவே இல்லையே நான்... இப்போ நினைக்கும் போது அன்று ஒரு நாளே அழுது தீர்த்திருக்கலாம் என தோன்றுகிறது.... தினம் தினம் அழுவதைக் காட்டிலும் அது எவ்வளவோ மேல்....
இன்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது வாங்க மேடம் என்று குறும்பாக அழைக்க யார் இருக்கா?
பசிக்கிறது என்றதும் ஒரு வாய் சாதம் ஊட்ட யார் வருவா?
ஆயிரம் தலையனைகள் இருந்தும் நான் தலை வைத்து படுக்க உனது மடியை மட்டும் காணோம்
நிஜமாக என் முன் சுற்றி திரிந்த உன்னை புகைப்பட நிழலாக மட்டுமே பார்க்கிறேன்....
ஓயாமல் அழுகிறேன்..... யாருக்கும் தெரியாமால்....
ஆனால் ஒரே நிம்மதி..... கூடிய விரைவில் நீ என் மகளாக வந்து பிறப்பாய் என ஒரு நெஞ்சம் தந்த நம்பிக்கையில் பிறந்தது.....
ஓடி வா அம்மா சண்டைப் போட ஆளே இல்லை எனக்கு.
No comments:
Post a Comment